23,000+ பள்ளிகள், 600+ கல்லூரிகள்.. நிமிஷா பிரியாவை காப்பாற்றிய அபூபக்கரின் இன்னொரு பக்கம் தெரியுமா!
திருவனந்தபுரம்: ஏமன் நாட்டில் சிறையில் இருந்த நிமிஷா பிரியா மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதில் 'கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா' என்று அழைக்கப்படும் காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியாரின் பங்கு முக்கியமானது. நிமிஷா பிரியா விவகாரம் மட்டுமின்றி கடந்த பல ஆண்டுகளாகவே இவர் பல்வேறு சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். குறிப்பாகக் கல்வியில் பல முக்கிய சேவைகளை ஆற்றி இருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
94 வயதான காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார், அதிகாரப்பூர்வமாக ஷேக் அபூபக்கர் அகமது என்று அழைக்கப்படுகிறார். 'கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா' என்று அழைக்கப்படும் இவர், ஏமனில் உள்ள மத அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த ஏமன் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தை மூலமாகவே நிமிஷா பிரியா மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

ஷேக் அபூபக்கர் அகமது
கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் சாண்டி உம்மனின் வேண்டுகோள் விடுத்தாலேயே ஷேக் அபூபக்கர் அகமது இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். ஏமன் சூஃபி அறிஞரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சியே நிமிஷா பிரியாவை காப்பாற்றியுள்ளது
.
கேரளாவைச் சேர்ந்த ஷேக் அபூபக்கர் அகமது இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியா முழுவதும் மதிக்கப்படும் ஒரு நபராகவும் திகழ்கிறார். இதன் காரணமாகவே ஒரே ஒரு போன்கால் மூலம் இவரால் மரண தண்டனையை நிறுத்த முடிந்துள்ளது. மேலும், இஸ்லாமிய மதத்தில் முஃப்தி என்பவர் இஸ்லாமியச் சட்ட (ஷரியா) விஷயங்களில் சட்டப்பூர்வமான கருத்துக்களை (ஃபத்வாக்கள்) வழங்கத் தகுதியானவராக அறியப்படுகிறார்.
யார் இவர்
மதம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள். "கிராண்ட் முஃப்தி" என்றால் ஒரு பிராந்தியம் அல்லது நாட்டின் மிக உயர்ந்த முஃப்தியைக் குறிக்கிறது. இதன் காரணமாகவே ஷேக் அபூபக்கர் அகமதின் கருத்துகளை ஏமன் அதிகாரிகள் முக்கியமானதாக எடுத்துக் கொண்டுள்ளனர். நிமிஷா பிரியாவை காப்பாற்றியது மட்டுமின்றி ஷேக் அபூபக்கர் பல்வேறு கல்விப் பணிகளையும் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்
பள்ளி கல்லூரிகள்
கல்வி மூலமாகவே சமூக ஒற்றுமை வலுவடையும் என்று அவர் கருதுகிறார். இதனால் கல்வித்துறையில் மகத்தான பங்களிப்புகளைக் கொடுத்துள்ளார். நாடு முழுக்க பல்வேறு பள்ளி, கல்லூரிகளை ஆரம்பிக்க இவர் உறுதுணையாக இருந்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைவதில் இவர் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
1978-ல் நிறுவப்பட்ட புகழ்பெற்ற ஜாமியா மார்கஸ் உட்பட இவரது கல்வி நிறுவனங்கள் மூலம் இதுவரை பல லட்சம் பேர் படித்துள்ளனர். தற்போது அவர் கீழ் 12,232 தொடக்கப் பள்ளிகள், 11,010 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகிறது. இதுபோக 638 கல்லூரிகளும் அவர் கீழ் இயங்கி வருவதாக காந்தபுர அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Yasmin fathima

