17 கோரிக்கைகளை முன்னிறுத்தி.. பாரத் பந்த்! கேரளா, பீகார், மேற்கு வங்கத்தில் பொது சேவைகள் பாதிப்பு
டெல்லி: சமீபத்தில் தெலங்கானா, ஆந்திரா என பல மாநிலங்களில் வேலை நேரம் 10-12 என உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி இன்று நாடு தழுவிய பந்த் நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் பொது சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன

அனைத்து துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த பந்த் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்திருக்கின்றன
பந்த் ஏன்?
விலைவாசி உயர்வு
புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்
வேலை வாய்ப்புகள்
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்கள் கைவிட வேண்டும்
குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும்
பொதுத்துறை நிறுவனங்களை விற்க கூடாது
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்
என்று இப்படி 17 அம்ச கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்திருக்கின்றன. மின்சார ஊழியர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் சங்கம், அரசு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள் சங்கம், மருத்துவ ஊழியர்கள் சங்கம், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சங்கம், மாணவ, வாலிப, மாதர் சங்கங்கள் என அனைத்து துறை சார்ந்த சங்கங்களும் இன்று இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
நாடு தழுவிய நிலையில் இந்த பந்த் நடப்பதால் இது மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு என்பது சமீபத்திய பிரச்சனையாக வெடித்து வருகிறது. அரசு தரும் புள்ளி விவரங்களில் வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி ஆகியவை முன்னேற்றமடைந்து இருப்பதாக காட்டப்பட்டாலும், யாதார்த்த நிலைமைகள் இதற்கு மாறாகவே இருக்கின்றன. மற்ற துறைகளிலும் இதே நிலைமைதான் என்பதற்கு வேலைவாய்ப்பு துறை ஓர் உதாரணம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
சில மாநிலங்களில் ஆட்டோ தொழிலாளர்கள் தொடங்கி, அரசு பஸ் ஓட்டுநர்கள் வரை இந்த பந்தத்தில் பங்கேற்றிருக்கின்றனர். எனவே, இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் வங்கி மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் இந்த பந்தத்தில் பங்கேற்பதால் இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலைகள் குறைந்த ஊழியர்களை கொண்டே நடக்கும்.
இந்த வேலை நிறுத்தத்தில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. பந்த்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், இதில் மொத்தமாக 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
'அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்து' இந்த பந்த் நடப்பதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. இதில் எந்த அமைப்புகளையும் சாராமல் இருக்கும் உதிரி தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன


Yasmin fathima

