தமிழ்நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் - காவல்துறை கூடுதல் இயக்குநர்

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் - காவல்துறை கூடுதல் இயக்குநர்
சுமார் 61 டன் அளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.;

சென்னை,

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக துடிப்பான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலால் ஏற்படும் நெருக்கடியை முழுத் தீவிரத்துடன் எதிர்கொள்ள மாநில அரசு ஒரு விரிவான செயலாக்கத்தினைத் தொடங்கியுள்ளது. தடுத்தல், கண்டறிதல், சட்ட அமலாக்கம், பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கைப்பற்றுதல், அழித்தல், நிதி விசாரணைகள் மூலம் குற்றவாளிகளின் நிதி ஆதாரங்களை முடக்குதல் மற்றும் மாணவர்கள், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வலுவான செயல்திட்டத்துடன், பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கின்றது.

தமிழ்நாட்டின் போதைப்பொருள் தடுப்பு மையத்தில், தரவு சார்ந்த நடவடிக்கைகளின் துணையுடன் கடுமையான சட்ட அமலாக்கம் உள்ளது. போதைப்பொருள் செயல்பாடுகளின் முக்கிய மையங்களைக் (hotspots) குறிவைத்து, மேம்பட்ட கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி, போதைப்பொட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் தமிழ்நாடு காவல்துறை தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக “பூஜ்ஜிய கஞ்சா சாகுபடி“ என்ற இலக்கினை மேற்கொண்டு வருவதால், இங்கு புகழக்கத்தில் உள்ள போதைப்பொருட்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களிலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கடத்தி கொண்டுவரப்படுகின்றன. 2021 ஜீன் முதல் 2025 ஜூலை வரையில், தமிழ்நாடு காவல்துறை சுமார் 107 டன் கஞ்சா, 3,59,000 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 2412 கிலோ பிற போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

ஜூலை 2025-ல் கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படவிருந்த சுமார் 5,250 எண்ணிக்கையிலான கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போதைப்பொருள் விற்பனை குழுக்களின் வளர்ந்து வரும் தந்திரோபாயங்களையும், அவற்றை சட்ட அமலாக்க முகமைகளின் செயலூக்கமான பதிலையும் பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். எந்தவொரு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்கும் முக்கியமான ஒன்று, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பாகவும் சட்டப்பூர்வமாகவும் அழிப்பதாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருட்கள் அழிப்பு நடவடிக்கைகளில் சுமார் 61 டன் அளவிலான பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.