கடந்த 6 மாதங்களில் 709 வழக்குகளில் 1,133 பேருக்கு தண்டனை - தென் மண்டல ஐ.ஜி. தகவல்

கடந்த 6 மாதங்களில் 709 வழக்குகளில் 1,133 பேருக்கு தண்டனை - தென் மண்டல ஐ.ஜி. தகவல்
தென் மண்டலத்தில் 89 கொலை வழக்குகளில் நெல்லையில் அதிகபடியாக 15 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது.;

மதுரை,

தென் மண்டலத்தில் கடந்த 6 மாதங்களில் 709 குற்றவழக்குகளில் 1,133 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளதாக ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"தென் மண்டல காவல்துறை 2025-ம் ஆண்டின் முதல் அரையாண்டில், கொலை, கொலை முயற்சி மற்றும் போதை தடுப்பு (என்.டி.பி.எஸ்) போன்ற முக்கிய குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று தருவதில் கணிசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. மொத்தம் 709 வழக்குகளில் 1,133 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இது போலீசாரின் திறமையான விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த முயற்சிகளை பிரதிபலிக்கிறது.

அதன்படி, தென் மண்டலத்தில் 89 கொலை வழக்குகளில் நெல்லையில் அதிகபடியாக 15 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது. அதில் ஒரு வழக்கில் ஒரு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தேனியில் 15 வழக்குகளும், தூத்துக்குடியில் 13 வழக்குகளும், விருதுநகரில் 12 வழக்குகளும், சிவகங்கையில் 9 வழக்குகளும் என மொத்தமாக 196 குற்றவாளிகள் கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டனர். இவர்களில் 27 பேர் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள். மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் 14 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் 2024-ம் ஆண்டில் 232 குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட 132 கொலை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. அவற்றில் 47 வழக்குகள் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.