ஓய்வுக்கு பின் வசதியாக வாழ்வதற்கு தலா 3.50 கோடி ரூபாய் தேவை': சொல்கிறது, எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கை

ஓய்வுக்கு பின் வசதியாக வாழ்வதற்கு தலா 3.50 கோடி ரூபாய் தேவை': சொல்கிறது, எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கை
பார்த்ததும் பலருக்கு பதற்றமும் சிலருக்கு இது நமக்கில்ல என்ற ஆதங்கமும் ஏற்படக்கூடிய செய்தி இது.

இந்தியர்கள் வசதியான ஓய்வு காலத்தை அனுபவிக்க, தலா 3.50 கோடி ரூபாய் தேவைப்படும் என எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வு தெரிவிக்கிறது.

'வசதிபடைத்த முதலீட்டாளர்கள் குறித்த பார்வை 2025' என்ற தலைப்பில் இந்தியர்களின் ஓய்வு கால திட்டமிடல் மற்றும் இதுதொடர்பான சேமிப்புகள் குறித்து எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கை வெளியிட்டு உ ள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டு உள் ளதாவது:

வசதியான மற்றும் பாதுகாப்பான ஓய்வு காலத்தை அனுபவிக்க இந்தியர்களுக்கு, தலா 3.50 கோடி ரூபாய் தேவைப்படும். விலைவாசி, பணவீக்கம் மற்றும் ஆயுட்காலம் அதிகரிப்பு உள்ளிட்டவை இந்தியர்களின் ஓய்வு கால திட்டமிடலை மாற்றியமைத்து வருகின்றன. இந்திய முதலீட்டாளர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது..

பயணம், கல்வி மற்றும் சொத்து வாங்குவது உள்ளிட்ட குறுகிய கால இலக்குகளுக்கே பலரும் இன்னும் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். எனினும், நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய முதலீட்டாளர்கள் விலைவாசி அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை குறித்து அதிகம் கவலை கொள்கின்றனர். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தங்களது நிதி இலக்குகளை அடைவதில் இந்தியர்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர்.

சொத்து முதலீடு, குடும்பத்துக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பது, தனிப்பட்ட நலனுக்கான சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பங்குகள், மியூச்சுவல் பண்டு, எஸ்.ஐ.பி., போன்ற நிர்வகிக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் தங்கத்திலேயே அதிகம் முதலீடு செய்கின்றனர். கடந்த 12 மாதங்களைப் பொறுத்தவரை தங்கத்தில் தான் அதிக முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே காலத்தில் ரொக்க சேமிப்பு 15 சதவீதம் குறைந்துள்ளது.

முப்பது வயது ஆரம்பத்திலேயே ஓய்வு கால திட்டமிடலைத் துவங்கிய முதலீட்டாளர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதே நேரத்தில் தாமதமாகத் துவங்கியவர்கள், தங்கள் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கை முறையில் சமரசம் செய்ய வேண்டியிருக்குமோ என்று கவலை தெரிவித்தனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது