செயலியில் கதை படித்தால் காசு வரும்' - பெண்களை குறிவைத்து கொடைக்கானலில் நடந்த லுக் ஆப் மோசடி
இருபதாயிரம் ரூபாய் செலுத்தி செயலியில் (App) கதை படித்தால் தினமும் 700 ரூபாய் பெறலாம்' எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, தனியார் நிறுவனம் மீது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.

ரோஸ்லின் மேரி (வலதுபுறம்), லுக் செயலி மூலம் சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
அவர்கள் யாரையும் நேரில் பார்த்தது இல்லை. வாட்ஸ்ஆப் உரையாடல் மூலம் மட்டுமே மொத்த பணத்தையும் ஏமாற்றிவிட்டனர்" எனக் கூறுகின்றனர், கொடைக்கானல் பகுதி மக்கள்.
புத்தகம் படித்தாலே பணம் வருமா? மோசடி நடந்தது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் மேரி. இவருக்கு உறவினர் ஒருவர் மூலம் லுக் கல்ச்சர் மீடியா (Look Culture Media) என்ற செயலியின் அறிமுகம் கிடைத்துள்ளது.
செயலியில் 20,300 ரூபாயை செலுத்தினால் தினசரி 700 ரூபாய் வரும்' எனக் கூறியதால் அவரும் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளார். "தினமும் ஆங்கில நாவல் படிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். ஒரு பாராவை படித்தால் 28 ரூபாய் என 700 ரூபாய் வரை பணம் கொடுத்தனர். பணம் எடுக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டு இருந்தது" எனக் கூறுகிறார், ரோஸ்லின் மேரி.
படிக்க வேண்டாம்... பார்த்தால் போதும்'

செயலியில் பணம் செலுத்திய பிறகு வாட்ஸ்ஆப் குழு மூலம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.
லுக் செயலியில் (Look App) 2,250 ரூபாய், 6,600 ரூபாய், 20,300 ரூபாய் என மூன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை வகைப்படுத்தியுள்ளனர். செயலிக்குள் நுழையும்போது ஆங்கில நாவலின் பிடிஎஃப் இருந்துள்ளது. ஒரு பாராவை படிப்பதற்கு 20 நொடிகள் அவகாசம் கொடுத்துள்ளனர்.
"அதைப் படிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதன் மேல் பகுதியில் 20 செகன்ட் வரை ஓடிக் கொண்டிருக்கும். 2,250 ரூபாய் செலுத்தினால் ஒருமுறை படிப்பதற்கு 15 ரூபாய் என ஐந்து வாய்ப்புகளைத் தருவார்கள். 20,300 ரூபாய் செலுத்தினால் தினமும் 700 ரூபாய் வரை கிடைக்கும் என்ற வகையில் அந்தச் செயலி இருந்தது" எனக் கூறுகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த அமுதா.
செயலியில் பணம் செலுத்திய பிறகு வாட்ஸ்ஆப் குழு மூலம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். "எனக்குக் கீழே ஆட்களைச் சேர்த்துவிட்டால் போனஸ் வரும் எனக் கூறினார்கள். நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரையும் சேர்த்துவிட்டேன்" என்கிறார், ரோஸ்லின் மேரி.
கடந்த டிசம்பர் மாதம் செயலியில் இணைந்த இவருக்கு முதல் மூன்று மாதங்கள் வரை பணம் வந்துள்ளது. "ஆட்கள் அதிகளவில் சேரத் தொடங்கியதும் தினமும் கொடுத்துக் கொண்டிருந்த பணத்தை வாரம் ஒருநாள் என மாற்றினர். வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் பணம் எடுக்க முடியாது" எனவும் ரோஸ்லின் மேரி குறிப்பிட்டார்.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள்

அவர்கள் யாரும் போனிலோ, வாட்ஸ்ஆப்பிலோ பேச மாட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவு மட்டும் வந்து கொண்டே இருக்கும்" என்று கூறுகிறார் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமுதா
லுக் செயலியில் நமக்கான பணத்தை எடுக்கும்போது அது வேறு ஒருவரின் யுபிஐ பரிவர்த்தனைக்கான முகவரியாக இருந்தது. லுக் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண் என எதுவும் குறிப்பிடவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு நான்கைந்து யுபிஐ முகவரிகளைக் கொடுத்து அந்த எண்ணுக்கு புதிதாகச் சேரும் நபர்களின் பணத்தைப் பிரித்து அனுப்புமாறு தனக்குக் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர் கடந்த மாதம் சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை லுக் செயலி மூலம் செலுத்தியுள்ளார். அதற்கான போனஸ் பணத்தை எடுக்க முற்பட்டபோது, ரோஸ்லின் மேரியின் வங்கிக் கணக்கை அதிகாரிகள் முடக்கிவிட்டனர்.
"வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, சூதாட்டத்தின் மூலம் இந்தப் பணம் வந்துள்ளது' எனக் கூறி காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறினர் புத்தகம் படிப்பதுதான் டாஸ்க் எனக் கூறியதால் ஆர்வமாக இணைந்தோம். இதனால் எனக்கு மட்டும் 3 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
கொடைக்கானலில் 360 பேரிடம் மோசடி

லுக் செயலி நிறுவனத்தினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி ஆட்களைச் சேர்த்துள்ளனர்
இந்த மோசடியில் கொடைக்கானலில் மட்டும் சுமார் 360 பேர் ஏமாந்துள்ளதாகக் கூறும் ரோஸ்லின், "பணம் செலுத்தியவர்களில் பலரும் பீடி சுற்றும் பணி செய்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என மிகச் சாதாரணமானவர்கள். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட மாநிலம் முழுவதும் லுக் செயலி மூலம் மோசடி நடந்துள்ளது" என்கிறார்.



